வேலூர் கோட்டையில் மத்திய தொல்லியல் துறையின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் !!!
மத்திய தொல்லியல்துறை மற்றும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் பண்பாட்டு மற்றும் தொன்மை சின்னங்களை பாதுகாக்க வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை வேலூர் கோட்டை அருகில் நடந்தது.
இந்திய சுதந்திர அமுத பெருவிழாவை முன்னிட்டு மத்திய தொல்லியல்துறையும், கலை, பண்பாட்டுத்துறையும் இணைந்து கலச்சாரம், பண்பாடு இவற்றின் அடையாளங்களாக இருக்கும் தொன்மையான சின்னங்களை பாதுகாப்பதன் மூலம் நமது வரலாற்றை அறிய முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில் இன்று ஓவிய போட்டி மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். மத்திய கலை மற்றும் பண்பாட்டு அமைச்சக சிறப்பு அலுவலர் அங்குஜ், வேலூர் கோட்டை முதுநிலை பராமரிப்பு அலுவலர் அகல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் கைகளில் பண்பாட்டு அடையாளங்களாக திகழும் தொன்மை சின்னங்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி சென்றனர். தொடர்ந்து ஓவிய போட்டிகள் நடந்தன. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து இன்று மாலை கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
Comments
Post a Comment